கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னெடுப்பில் ஸ்ட்ரைக் நடைபெற்று வருகிறது. புதிய படங்களை வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். மார்ச் 16-ம் தேதி முதல் ஷூட்டிங், இதர பணிகளும் ரத்து செய்யப்பட்டு ஸ்ட்ரைக் தீவிரமாக்கப்பட்டது.
திரையுலகின் இந்த ஸ்ட்ரைக்கில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், திரைக் கலைஞர்கள், டெக்னீஷியன்கள் என அனைவரும் இணைந்திருக்கிறார்கள். இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஸ்ட்ரைக்கின் நியாயங்கள் குறித்தும், சினிமா துறையினர் நெருக்கடியில் இருப்பதற்கான காரணங்கள் குறித்தும் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பி.ஜி.முத்தையா தனது ஃபேஸ்புக்கில் நீண்ட பதிவொன்றை எழுதியுள்ளார்.
அவரது பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,
"தற்போது தமிழ்திரையுலகம் மிகுந்த நெருக்கடியில் உள்ளதை நாம் அனைவருமே அறிவோம். முழுமுதற் காரணம் பணம் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் அந்தப் பணத்தை திரும்பப் பெற வாய்ப்பே இல்லா பரிதாபகரமான சூழலில் தமிழ் சினிமா தயாரிப்புத் தொழில் இயந்திரத்தில் சிக்கிய கரும்பாய் தவிப்பதற்கு முக்கிய காரணங்கள்:
1. சிறிய முதலீட்டுப் படங்களுக்கு மினிமம் கேரண்டி உத்திரவாதம் இல்லை.
2. சிறு படங்களை வாங்க எவரும் முன்வருவதில்லை தயாரிப்பாளரே விநியோகஸ்தராகவும் செயல்பட வேண்டிய கட்டாயம்.
3. தயாரிப்பின் மூன்று நிலைமற்றும் வணிகம் என அனைத்து நிலையிலும் ஜி எஸ் டி வரி. மற்றும் தமிழக அரசின் பொழுதுபோக்கு வரி.
4. திரையரங்கிற்கும் வாடகை பணம் செலுத்த வேண்டிய நிர்பந்தம்.
5. கூடுதலாக க்யூப் யூ எப் ஓ கட்டணம் கட்டியாக வேண்டும்.
6. இவ்வளவுக்கும் தயாராக இருந்தாலும் சிறு படங்களுக்கு தியேட்டர் தரமறுக்கும் அவலம்.
7. தியேட்டர் தந்தாலும் சஸ்டெயினிங் டைம் எனப்படும் வெற்றிக்கு உகந்த நேரம் வழங்காமல் ஒரேநாளில் ஒரே காட்சியில் கூட்டம் இல்லை எனக் கூறி திரைப்படத்தை நிறுத்திவிடுவது.
8. இவ்வளவு துன்பத்தையும் மீறி படம் தயாரித்த தயாரிப்பாளருக்கு உண்மை கணக்கு காட்டாமல் திருட்டு கணக்கு காட்டும் திரையரங்கங்கள்.
9. இது அனைத்திலும் கொடிய திருட்டு விசிடி சவால். இத்தனை ஆபத்துக்களையும் தாண்டி படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை உண்மையில் மாபெரும் தியாகிகள் என்றே சொல்லலாம்.
இதில் தற்போது தயாரிப்பாளர் சங்கம் திருட்டு டிக்கெட் இல்லாத ஆன் லைன் டிக்கெட்டிங்கை வலியுறுத்துகிறது. அதை இந்த நொடி வரை திரையரங்க உரிமையாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள். க்யூப் கட்டணத்தையும் குறைக்க மறுக்கிறார்கள்.
அதனால் தான் ஸ்ட்ரைக் தொடர்கிறது. இந்த ஸ்ட்ரைக் காலத்தின் கட்டாயம். இல்லையேல் கார்ப்பரேட் பெரு முதலாளிகள் மட்டும் தான் படம் எடுக்க முடியும். சிறு தயாரிப்பாளர்கள் என்கிற வர்க்கமே இல்லாமல் போய்விடும்.
எனவே தயாரிப்பாளர் சங்கம் முன்வைத்துப் போராடும் கோரிக்கைகள் நியாமானவை மற்றும் அவசியமானவை. தமிழ் சினிமா தயாரிப்புத் துறையை காப்பாற்ற தற்போது எடுத்திருக்கும் நிலைபாட்டிற்கு துணை நின்று நமது சங்கமும் நாமும் இந்தமுறை வென்று காட்ட வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார் பி.ஜி.முத்தையா.

Cinematographer P.G.Muthiah says reasons for cinema strike. He shares the reasons for cinema industry in crisis.