இவர்தான் முதலமைச்சர்... - ஜெயலலிதா செய்த அறிமுகம்!<br /><br />அதன் பிறகு தலைமைக் கழகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு. கான்பரஸ் ஹாலுக்கு வந்த ஜெயலிதா தன் நாற்காலியில் உட்கார்ந்துவிட்டு திரும்பிப் பார்த்தால் பன்னீர் செல்வத்தைக் காணவில்லை. பல அடி தூரம் தள்ளி பவ்யமாக உடல் வணங்கி நின்றிருந்தார். திரும்பிப் பார்த்த ஜெயலலிதா, “வாங்க! பக்கத்துல உட்காருங்க... அவருக்கு சேர் போடுங்க” என்று படபடக்க சேர் வந்தது. பன்னீர் நாற்காலியின் நுனியில் பவ்யமாக அமர்ந்தார். பத்திரிகையாளர்களுக்குப் புரிந்துவிட்டது புதிய முதல்வர் இவர்தான் என்று. ஆனால், “இவரை இதற்கு முன்பு எங்கு பார்த்திருக்கிறோம்.... இவர் எந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ... என்று சென்னைப் பத்திரிகையாளர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது பேச ஆரம்பித்த ஜெயலலிதா, “எங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் புதிய முதல்வர் பன்னீர் செல்வம்” என்று சம்பிரதாயமாக அறிவித்துவிட்டு, பத்திரிகையாளர்களின் மற்ற கேள்விகளை ஒதுக்கித்தள்ளிவிட்டு போயஸ் தோட்டம் நோக்கிப் பறந்தார்.