மனிதனுக்குத் தேவையான உணவு, காற்று, குடிநீர் போன்ற எந்த தேவையையும் நாம் இயற்கையிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இயற்கைக்கு எதிராக நாம் செயல்பட ஆரம்பித்ததன் விளைவாக, அவற்றைப் பணம் கொடுத்து வாங்கவேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். வீட்டுக்கு வருபவர்களுக்கு, முதலில் தண்ணீர் கொடுத்து வரவேற்பது நம் தமிழர் மரபு. ஆனால், இன்றைக்கு அந்தத் தண்ணீரே தரமில்லாததாக இருந்தால் என்ன செய்வது? தண்ணீர்... நமக்கும், நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் நோயை ஏற்படுத்தும் ஒரு காரணியாக மாற நாம் அனுமதிக்கக்கூடாது. மேலும், நாம் வாங்கும் கேன் தண்ணீர் தரமானதுதானா? என்று கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கான குறைந்தபட்ச முயற்சியையாவது எடுக்கவேண்டும். இல்லையேல் நாம் குடிக்கும் நீர் நம் உயிருக்கு உலை வைக்கும்.
