நீலகிரி: படுகர் இன மக்களின் பண்டிகையை, 14 கிராம மக்கள் தங்களது கலாச்சார உடையணிந்து வெகு விமரிசையாக கொண்டாடினர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு சீமைகளில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் கப்பு பண்டிகை என்று அழைக்கப்படும் தெய்வப் பண்டிகை வருடத்தின் தொடக்கமாகக் கொண்டாடி வருகின்றனர். படுகர் இனத்தின் முக்கிய திருவிழாவான ஹெத்தை பண்டிகை அனைத்து படுகர் இன கிராமங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த ஹெத்தையம்மன் திருவிழாவிற்கு தமிழக அரசு உள்ளூர் விடுமுறையும் அறிவித்து வருகிறது.

அந்த வகையில், இத்திருவிழாவை குந்தா சீமையை சேர்ந்த கீழ் குந்தா, பாக்கோரை, மட்டக்கண்டி, தூனேரி, மஞ்சூர், மணிக்கல், கரியமலை உள்ளிட்ட 14 ஊர் படுகர் இன மக்கள் வெகு விமரிசையாக ஆடிப் பாடிக் கொண்டாடினர்.

முன்னதாக, குலதெய்வங்களை வழிபட்டு, சிறப்புப் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட அம்மனை திருவீதி உலாவாக கோயிலுக்கு கொண்டு சென்றனர். இதற்காக, 14 ஊர் மக்கள் ஒன்றிணைந்து விரதம் இருந்து தங்களது கலாச்சார உடை அணிந்து, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாரம்பரிய நடனம் ஆடி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

இதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால், காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இப்பகுதியில் வரும் வாகனங்கள் அனைத்தும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.