<p>கோயமுத்தூர்: வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் தாய் யானை ஒன்று தனது குட்டிக்கு பலா மரத்தில் ஏறி பலாப்பழம் பறிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.</p><p>கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள் சோலையார் அணை, காடம்பாறை அணை, வெள்ளி முடி, மழுக்கு பாறை, நவமலை, பன்னிமேடு, முடிஸ் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது காட்டு யானை கூட்டங்கள் அதிக அளவில் உள்ளன. </p><p>இதில் புதுக்காடு பகுதியில் ஒற்றை காட்டு யானை நடமாட்டமும் இருக்கிறது. வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதால், வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், இரவு பகலாக சுழற்சி முறையில் பணியாற்றி, யானைகள் நடமாட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.</p><p>இந்த நிலையில் முடிஸ் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் தாய் யானை ஒன்று தனது குட்டிக்காக பலா மரத்தில் ஏறி பலாப்பழம் பறிக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து வனத் துறையினர் கூறுகையில் "முடிஸ் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதால் அதனை, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது தாய் யானை தனது குட்டிக்காக பலா மரத்தில் ஏறி பலாப்பழம் பறித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும், வனவிலங்குகள் பகல் நேரத்தில் நடமாட்டம் உள்ளதால் எஸ்டேட் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்துள்ளோம்" எனத் தெரிவித்தனர்.</p>