<p>ஈரோடு: தாளவாடி அருகே இளநீர் ஏற்றிச் சென்ற சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், சாலையில் விழுந்து சிதறிய இளநீரை இளைஞர்கள் எடுத்துச் சென்ற வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.</p><p>ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி பகுதியில் தென்னை விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு விளையும் இளநீர் சென்னை, கோவை போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து இளநீரை வாங்கிச் செல்வதும் வழக்கமாக உள்ளது.</p><p>இந்த நிலையில், இன்று (ஜூலை 28) சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இளநீர் ஏற்றி வந்த லாரி ஒன்று, காரப்பள்ளம் வன சோதனைச் சாவடி அருகே சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.</p><p>லாரி கவிந்ததில் லாரியில் இருந்த இளநீர் காய்கள் சாலையில் விழுந்து சிதறின. இதனை, அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் சென்ற இளைஞர்கள் தங்களது வாகனத்தில் வைத்து எடுத்துச் சென்றனர். அதில், சிலர் அங்கேயே இளைநீரை உடைத்து குடித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் சாலையில் கவிழ்ந்த லாரியை மீட்டு, சாலையில் சிதறி கிடந்த இளநீர் காய்களை மற்றொரு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். </p>