திண்டுக்கல்: நத்தம் அருகே மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கருப்பு சுவாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று சமைத்து சாப்பிடும் வினோத திருவிழா கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே குட்டுப்பட்டியில் உள்ள கரந்தமலை கருப்பு சுவாமி கோயிலில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு, பல ஆண்டுகளாக பாரம்பரியமாக நடைபெறும் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா நடைபெற்றது.

மலை அடிவாரத்தில் அமைந்த இந்தக் கோயிலில், பிறந்த குழந்தை உட்பட பெண்கள் வரை பங்கேற்க அனுமதி இல்லை. இந்த ஆண்டு, இவ்விழா ஆடி அமாவாசை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கியது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்ட பின் இளைஞர்கள் ஒன்றிணைந்து உரித்து, சுத்தம் செய்து, சமைத்தனர்.

சமையல் முடிந்த பின்னர், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கருப்பசாமிக்கு படைக்கப்பட்ட உருண்டை சாதம் பிரசாதமாக ஆண்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் அதிகாலை வரை சுமார் 5,000-க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு உருண்டை சாதத்துடன் ஆட்டுக்கறி குழம்பு அன்னதானமாக வழங்கப்பட்டது. விடிய விடிய நடைபெற்ற இந்தத் திருவிழாவில் குட்டுப்பட்டி, ஒத்தினிப்பட்டி, பஞ்சயம்பட்டி, பாலப்பட்டி, புதுப்பட்டி, மாம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்றனர். இந்த விழா, பாரம்பரியத்தையும் சமூக ஒற்றுமையையும் பறைசாற்றுவதாக அமைந்தது.