<p>நீலகிரி: நீலகிரியில் பள்ளி வளாகத்தில் உலா வந்த காட்டு யானை, மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோவை, தாக்கி கவிழ்த்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>நீலகிரி மாவட்டம் பாடந்துறை பகுதியில், நேற்று (ஜூலை 29) திடீரென புகுந்த காட்டுயானைகள் அட்டகாசம் செய்ய தொடங்கியுள்ளது. அப்போது, பாடந்துறை சிஎஸ்ஐ பள்ளி வளாகத்திற்கு புகுந்த காட்டு யானை ஒன்று, பள்ளி குழந்தைகளை இறக்கிவிட்டுச் சென்ற ஆட்டோவை கவிழ்த்துள்ளது. அதில், காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>இதனால், பள்ளி செல்லும் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள், யானை செல்லும் பாதையை கண்காணிக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "இரவில்தான் யானைகள் வரும். ஆனால், காலை நேரத்தில் யானை தாக்குதல் நடத்தினால், அது மிகவும் ஆபத்தானது. இந்த சம்பவத்தால், பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் நபர்கள் என அனைவரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். எனவே, வனத்துறை அதிகாரிகள் உடனடியாக பாதுகப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த யானையை காட்டுக்குள் விரட்ட வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளனர்.</p>