<p>நீலகிரி: குடியிருப்புக்குள் புகுந்த கரடி அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் இருக்கைகள், பூந்தொட்டிகளை சேதப்படுத்திய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p>நீலகிரி மாவட்டத்தில் 65 சதவீதம் வனப்பகுதிகள் நிறைந்த மாவட்டமாகும். இங்குள்ள வனப்பகுதியில் கரடி, காட்டெருமை, சிறுத்தை, புலி, மான், யானை போன்ற வனவிலங்குகளும் வாழ்ந்து வருகிறது. தற்போது வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ள நிலையில் உணவு மற்றும் குடிநீருக்காக குடியிருப்பு பகுதியை நோக்கி வருகிறது. </p><p>குறிப்பாக உதகை, குன்னூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், உதகை அருகே புதுமந்து பகுதியில் கரடி ஒன்று வீட்டின் கதவை தட்டியுள்ளது. வீட்டின் கதவை தட்டும் சத்தத்தை கேட்ட வீட்டின் உரிமையாளா் கதவை திறந்து பாா்த்தபோது கதவின் முன்பு கரடி இருப்பதை பாா்த்து அதிா்ந்து போய் கதவை மூடியுள்ளார்.</p><p>பின்னா் கரடி அங்கு வாசலில் இருந்த பிளாஸ்டிக் இருக்கைகள், பூந்தொட்டிகளை சேதப்படுத்தி சென்றது. அசம்பாவிதம் நடைபெறும் முன்பு உதகையில் நீண்ட நாள்களாக சுற்றிவரும் கரடியை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். </p>