<p>தூத்துக்குடி: தன்னுடன் இருந்த ஆடு இறந்துவிட்டதால் தாய்ப்பாசத்தை விஞ்சும் விதமாய் பசு மாடு ஒன்று இரண்டு ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ள ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் விவசாயத் தொழில் பார்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்த்து வருகிறார்.</p><p>அவர் வளர்த்து வந்த ஆடுகளில் ஒன்று நிறைமாத கர்ப்பிணியாய் இருந்த நிலையில் மூன்று குட்டிகளை ஆடு ஈன்றெடுத்தது. பிரசவுித்த இரண்டு நாட்களில் அந்த தாய் ஆடு இறந்துவிட்டது. தாய் ஆடு இறந்த மூன்று நாட்களில் மூன்று குட்டிகளில் ஒரு குட்டியும் இறந்துவிட்ட நிலையில் மீதி இரண்டு குட்டிகள் உள்ளன. அதே சமயம் அந்த தோட்டத்தில் ஒரு பசு மாடு, ஆண் கன்றுக்குட்டியை ஈன்று எடுத்தது. தாய்ப்பாசத்தை மிஞ்சும் விதமாய் அந்த பசுமாட்டிடம் இரண்டு ஆட்டுக்குட்டிகளும் பால் குடித்து வளர்ந்து வருகின்றன.</p><p>இந்த பசுமாடானது இரண்டு ஆட்டுக்குட்டிகளுக்கும் பால் கொடுத்துவிட்டு தான், தனது கன்று குட்டிக்கு பால் கொடுத்து வருகிறது. இந்த சம்பவம் சுமார் மூன்று மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆச்சர்யத்துடன் வந்து பார்த்து செல்கிறார்கள். இந்த நிலையில் காலையில் கன்று குட்டிக்கும், ஆட்டுக்குட்டிக்கும் பால் கொடுத்துவிட்டு மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு மாலை நேரத்தில் தோட்டத்திற்கு வந்து தன் கன்று குட்டிக்கும், ஆட்டுக்குட்டிகளுக்கும் பால் கொடுத்து வருகிறது அந்த பசு மாடு. இந்த பசுவின் பாசமானது தாய்ப்பாசத்தை விட விஞ்சிய பாசமாக உள்ளதாக அந்த வீட்டின் உரிமையாளர் செல்வகுமார் அனைவரிடமும் பெருமிதத்துடன் கூறி வருகிறார். </p>