<p>தேனி: தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வைகை அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தற்போது 68.50 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணை ஐந்து மாவட்ட மக்களுக்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்காக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. </p><p>இந்த நிலையில், தற்போது அணைக்கு நீர்வரத்து 1805 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து 769 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>முன்னதாக, கடந்த ஜூலை 26 ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்த போதும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p>