<p>திண்டுக்கல்: ஆடித்திருவிழாவை முன்னிட்டு குரும்பாகுல அருள்மிகு ஶ்ரீ மகாலெட்சுமி மற்றும் ஶ்ரீ கருப்புசாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளனர்.</p><p>திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி வட்டாரம் கம்பிளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஆண்டியபட்டியில் குரும்பாகுல அருள்மிகு ஶ்ரீ மகாலெட்சுமி, ஶ்ரீ கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடித்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். 2 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் சாமி சாட்டுதல் நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட் 3) கோலகலமாக நடைபெற்றது.</p><p>இதில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டு தலையில் தேங்காய் உடைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் கோயில் பூசாரி அனைவரின் தலையிலும் தேங்காய் உடைத்தார். அப்போது பக்தர்கள் அனைவரும் 'கோவிந்தா, கோவிந்தா' என கோஷங்களை எழுப்பினர்.</p><p>முன்னதாக சாமி அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. இந்த திருவிழாவில், பழனி, தேனி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.</p>