<p>திருப்பத்தூர்: தேநீர் கடையில் தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு, கணக்கில் வைத்துக் கொள்ளும்படி கடை உரிமையாளரை மிரட்டி, பொருட்களை சேதப்படுத்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.</p><p>திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேநீீர் கடை உள்ளது. இங்கு வந்த நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த புகழேந்தி என்ற இளைஞர் தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு பணத்தை பிறகு தருகிறேன் கணக்கில் வைத்துக் கொள்ளும்படி என உரிமையாளரிடம் கூறியுள்ளார். </p><p>அதற்கு தற்போது பணத்தை செலுத்துங்கள் என உரிமையாளர் கூறியதால், புகழேந்திக்கும் கடை உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த புகழேந்தி கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி உள்ளார். பின்னர் அவருக்கு கையில் காயம் ஏற்படவே அவர் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற நிலையில், இது குறித்து தேநீர் கடை உரிமையாளர் வாணியம்பாடி நகர காவல்நிலத்தில் புகார் அளித்துள்ளார்.</p><p>அதனை தொடர்ந்து, தன் மீது புகார் அளித்ததை அறிந்த புகழேந்தி மீண்டும் இரண்டாவது முறையாக வந்து கடையை அடைத்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளார். அதனை தொடர்ந்து புகழேந்தியை வாணியம்பாடி நகர காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கடையில் ரகளை ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>