<p>சென்னை: வீட்டில் இருந்த சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வெடித்ததில் வீடு தரைமட்டமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>அம்பத்தூர் மேனாம்பேடு பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருபவர் மல்லிகா. இவர் வீட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மல்லிகாவும் அவரது மகனும் வெளியே கடைக்கு செல்லும் நேரத்தில் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வீட்டிற்குள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போராடி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும், அதற்குள் சிலிண்டர் வெடித்து சிதறியது. பின்னர், அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். </p><p>தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த அம்பத்தூர் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அதனை முழுவதுமாக அணைத்தனர். சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் வீட்டிலிருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது. மல்லிகாவும் அவரது மகனும் தீ விபத்து ஏற்படும் நேரத்தில் வெளியில் இருந்ததால் உயிரிழப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் சென்னை அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. </p>