<p>தஞ்சாவூர்: புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூத்தட்டுகளை ஏந்தி ஊர்வலமாக வந்து வழிபாடு செய்தனர்.</p><p>தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் உள்ள மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோயிலில் உள்ள அம்மன் புற்றுமண்ணால் ஆனதால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தைலக்காப்பு அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது.</p><p>இந்த நிலையில், இந்த கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மல்லிகை, முல்லை, ஜாதி மல்லி, நந்தியாவர்த்தம், பன்னீர் பூ, பவளமல்லி, வெள்ளை அல்லி, வெண்தாமரை, சம்பங்கி, சாமந்தி, வெண்காந்தள், ஆம்பல், சிவப்பு அரளி, ரோஜா, செம்பருத்தி, வெட்சிப் பூ, செந்தாமரை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பூத்தட்டுகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.</p><p>இதனையடுத்து, அம்மனுக்கு குங்கும அலங்காரமும், பூச்சொரிதல் விழாவும் நடைபெற்றது. இதில் அம்மனுக்கு 4.5 டன் பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாரதனை நடைபெற்றது. இவ்விழாவில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு முளைப்பாரி எடுத்து வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.</p>