<p>கேரளா: கேரள மாநிலம் இடுக்கி அருகே கட்டப்பனையில் புதிய பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் புறப்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்று மாலை தனியார் பேருந்து ஒன்று பேருந்து நிலையத்திற்க்குள் வந்தது. அப்போது ஓட்டுநர் பேருந்தை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை நோக்கி பேருந்தை இயக்கி உள்ளார். </p><p>அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நடைமேடை மீது ஏறி அங்கு அமர்ந்திருந்தவர்கள் மீது மோதியது. இதைப் பார்த்த பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை பின்னோக்கி இயக்கினார். இதையடுத்து நடைமேடை இருக்கையில் அமர்ந்திருந்தவாறு விபத்தில் சிக்கி காயமடைந்த 2-க்கும் மேற்பட்டவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தில் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. </p><p>இந்த சம்பவம் குறித்து அறிந்து வந்த கட்டப்பனை போலீசார் முதற்கட்ட விசாரணையாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ளனர். பேருந்து பிரேக் பிடிக்காமல் விபத்து ஏற்பட்டதா? அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>