<p>தஞ்சாவூர்: ஆடி தீர்த்தவாரியை முன்னிட்டு ரிஷப வாகன திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.</p><p>தஞ்சாவூரில் சீதா நந்தீஸ்வரர் ரிஷப வாகன திருக்கூட்டம் சார்பில் 4 ஆம் ஆண்டாக ஆடி தீர்த்தவாரி, ரிஷப வாகன காட்சி திருவிழா நேற்றிரவு (ஆகஸ்ட் 10) நடைபெற்றது. சிவபெருமான் அப்பர் பெருமானுக்கு திருக்கயிலாய காட்சி வழங்கும் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி சிவகணங்கள் இசைக்க, தீ பந்தம், கோலாட்டத்துடன் நடைபெற்றது. தஞ்சையில் பிரசித்தி பெற்ற கோயில்களான அருள்மிகு சீதா நந்தீஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு நாக நாகேஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு கேசவதீஸ்வரர் கோயில், அருள்மிகு திருநீலகண்டர் மடம் மற்றும் பஞ்சநதீஸ்வரர் பாவா மடம் ஆகிய கோயில்களிலிருந்து சுவாமி ரிஷப வாகனத்தில் புறப்பாடு நடைபெற்று தஞ்சை வடவாற்றங்கரை படிதுறையில் தீர்த்தவாரி நடைபெற்றது.</p><p>அதைத்தொடர்ந்து தஞ்சையின் ராஜ வீதிகளான கீழ ராஜவீதி, மேலராஜ வீதி, தெற்கு ராஜ வீதி, வடக்கு ராஜவீதி ஆகிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முன்னதாக, கீழ ராஜவீதி மாரியம்மன் கோயிலில் பகுதியில் இருந்து, திருவையாறு கட்டளை தம்பிரான் சுவாமிகள், சிவப்பிரகாச அடிகளார் ஆகியோர் கொடியசைத்து சுவாமி ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். மேலும், அப்பர் பெருமானுக்கு நேற்று காலை வடவாற்றங்கரை படித்துறையில் அபிஷேகம் நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கொட்டும் மழையில் சுவாமி தரிசனம் செய்தனர்.</p>