திண்டுக்கல்: நத்தம் அருகே பொன்னர் சங்கர் சுவாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே பாத சிறுகுடியில் பொன்னர் சங்கர் கோயில் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் உருண்டை சோறு கறி விருந்து திருவிழா இங்கு பாரம்பரியமாக நடைபெறுவது வழக்கம்.

இந்த விழா இந்த ஆண்டும் நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் 5,000-க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர். நள்ளிரவில் தொடங்கிய இந்தத் திருவிழாவில், பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 101 ஆடுகள் சாமிக்கு பலியிடப்பட்டன.

பின்னர், இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆடுகளை உரித்து சுத்தம் செய்து சமைத்தனர். சமையல் முடிந்த பிறகு, பூஜைகள் நடத்தப்பட்டு பொன்னர் சங்கர் சுவாமிக்கு உருண்டை சாதம் படைக்கப்பட்டது.

பாத சிறுகுடி, குமரபட்டி, புதூர், நத்தம், குட்டூர், மாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆண்கள் இவ்விழாவில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த பாரம்பரிய விழா, கிராம மக்களிடையே ஒற்றுமையையும் பக்தியையும் வெளிப்படுத்துவதாக அந்த அப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.