<p>தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள அம்மன் புற்று மண்ணால் ஆனது. அதனால் அபிஷேகம் எதுவும் செய்யப்படுவதில்லை. அதற்கு பதிலாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைலக்காப்பு மட்டுமே சாற்றப்படுகிறது. மேலும், ஆண்டுதோறும் ஆடி மாதம் முத்துப் பல்லக்கு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். </p><p>அந்த வகையில், இந்த ஆண்டு முத்துப் பல்லக்கு பெருவிழாவின் தொடக்க நிகழ்வான பால்குட விழா ஆக.10ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அம்மனுக்கு முத்துமணி சிவிகையில் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட பல்லக்கில் உற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. </p><p>இந்நிலையில் விழாவின் நிறைவு நாளாக நேற்று இரவு (ஆகஸ்ட் 12) அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், துர்க்கை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரபல நாதஸ்வர கலைஞர்களின் சிறப்பு நாதஸ்வரம் மற்றும் வயலின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து, இசை நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். </p>