<p>திருநெல்வேலி: நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர சுமார் 2,000 பேர் நாள் ஒன்றுக்கு புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் இங்கு பலவேசம் என்ற நபர் அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.</p><p>பொதுவாக அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளின் உடம்பில் கயிறு, வெள்ளிக் கொடி, நகைகள் போன்றவை இருந்தால் அவை அகற்றப்பட்டு விட்டு சிகிச்சைக்கு அனுப்படுவது வழக்கம். அந்த வகையில் பலவேசத்தை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை அரங்கிற்க்கு அழைத்துச் சென்ற போது அவரது கை விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழட்டும்படி கூறியுள்ளனர்.</p><p>இதையடுத்து செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பல முறை முயற்சி செய்தும், மோதிரத்தை கழட்ட முடியவில்லை. மோதிரம் மிகவும் இறுக்கமாக விரலில் மாட்டிக் கொண்டிருந்தது. பின், மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி பலவேசம் கையில் குளுக்கோஸ் ஏற்றுவதற்காக போடப்பட்ட ஊசியுடன் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு சென்றார். அங்கு தீயணைப்பு வீரர்கள் இரும்பு கம்பிகளை அறுப்பதற்கு பயன்படுத்தப்படும் நவீன கட்டிங் பிளேயரை கொண்டு மோதிரத்தை வெட்டி எடுத்தனர்.</p>