நீலகிரி: குழந்தையை அவசர சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லும் போது காட்டு யானைகளின் கூட்டம் வழி மறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக 2 குட்டிகளுடன் 7 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த காட்டு யானைகள் கூட்டம் காட்டுப் பகுதியில் இருந்து திடீரென சாலைக்கு வந்து விடுகின்றன.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள, மஞ்சூர் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை அவசர சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவ மனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லும் போது, யானைகள் வழி மறித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் ஆம்புலன்ஸ் பின் நோக்கி இயக்கப்பட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் சாலையிலேயே நின்றிருந்த யானைகள், பின்னர் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்ற பின் ஆம்புலன்ஸ் கோவைக்கு புறப்பட்டு சென்றது. மேலும் காட்டு யானைகள் தொடர்ந்து சாலை பகுதியில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

இந்த யானைகள் கூட்டம் அவ்வபோதும் சாலையின் குறுக்கே வந்து வாகனங்களை வழிமறித்து நிற்கின்றன. தற்போது யானைகள் நடமாட்டம் குறித்து அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சாலையில் செல்லும் வாகனங்கள் யானைகளைக் கண்டால் அந்த யானைகள் சாலையை கடந்து செல்லும் வரை வாகனங்களை நிறுத்தி செல்ல வேண்டும் என்றும் யானைகள் அருகே சென்று செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் முயற்சிக்கக் கூடாது எனவும் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென வனத்துறை அதிகாரிகள் ஏச்சரிக்கை விடுத்துள்ளனர்.