<p>கோயம்புத்தூர்: கன்னியாகுமரியை சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர், 7 டன் அதாவது சுமார் 7,000 கிலோ எடைக்கொண்ட பேருந்தை தரையில் அமர்ந்தபடி 30 மீட்டர் இழுத்து சென்று சாதனை படைத்தார். </p><p>கோவையில் உள்ள கேபிஆர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த சுதந்திர தின விழாவில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தி காட்டினார். இதற்கு முன்பு 9.5 டன் எடையுள்ள லாரியை கயிறு கட்டி இழுத்தும், 370 கிலோ எடைக்கொண்ட இஞ்சின் இல்லாத காரை தூக்கியும், சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றில் தென் ஆப்பிரிக்க வீரரின் சவாலை ஏற்று 85 கிலோ எடையுள்ள இரும்பு குண்டை ஒற்றை கையால் தூக்கியும் சாதனை படைத்தவர் கண்ணன். ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ எனும் பட்டத்தையும் இவர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் போதைப்பொருள் பழக்கத்தில் மூழ்கியுள்ளனர். அவர்களை உடற்பயிற்சி மற்றும் விளையாட்டால் மட்டுமே மீட்க முடியும். இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கற்றுக்கொடுத்து, அவர்களை போதைப்பழக்கத்தில் இருந்து மீட்பதே எனது லட்சியம் என்கிறார் கண்ணன்.</p>