<p>திருவள்ளூர்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.</p><p>திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும். இந்த திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்ப திருவிழா 5ஆம் நாள் நிகழ்ச்சி ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. </p><p>ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்று மூலவர் முருகப் பெருமானுக்கு அதிகாலை ஒரு மணி அளவில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம், வைர ஆபரணம், வைர கிரீடம், சிறப்பு, பச்சை மரகதக்கல் மாலை அணிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. </p><p>ஆடி கிருத்திகை நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தனது குடும்பத்துடன் இன்று அதிகாலை கோயிலுக்கு வருகை தந்தார். அவருக்கு திருக்கோயில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் முருகப்பெருமானையும், உற்சவர் சண்முகப் பெருமானையும் அவர் தரிசித்தார்.</p>