<p>தஞ்சாவூர்: கும்பகோணம் கீழவாசல் பகுதியில் பிரசித்தி பெற்ற வேணுகோபால சுவாமி ஆலயம் உள்ளது. அங்கு கிருஷ்ணன் ருக்மணி சத்யபாமா உடன் வீற்றிருக்கிறார். இந்த கோயிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு தொடக்க விழா நடைபெற்றது. </p><p>இந்த விழாவை முன்னிட்டு சுவாமிக்கு திரவிய பொடி, மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நவநீத கிருஷ்ணன், ருக்மணி, சத்யபாமா, கோதா (ஆண்டாள்), சமேத ஸ்ரீ ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.</p><p>இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மேலும், கிருஷ்ணனுக்கு பூஜை செய்யப்பட்ட மலர் மாலை, வெண்ணெய் ஆகியவையும் பக்தர்களுக்கு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து புகழ் பெற்ற உறியடி நிகழ்ச்சி, சுவாமி புறப்பாடு, பள்ளியறை மங்களம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.</p>