<p>தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சனீஸ்வரன் மூல கடவுளாக கருவறையில் வீற்றிருப்பது தனிச் சிறப்பு. இந்நிலையில் ஆடி மாதம் சனீஸ்வரனுக்கு மிகுந்த விசேஷ மாதம் என்பதால் கடந்த நான்கு சனிக்கிழமைகளும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. </p><p>இதன் தொடர்ச்சியாக இன்று ஆடி மாதம் கடைசி சனிக்கிழமை என்பதாலும் தொடர் விடுமுறை காரணமாகவும் சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மேலும், சனி தோஷம் உள்ளவர்கள், சனி திசை உள்ளவர்கள், ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள் கோயிலில் உள்ள சுரபி நதியில் நீராடி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, மண்ணால் செய்த காக வாகனத்தை தலையை சுற்றி எரிந்து, சனீஸ்வரனுக்கு எள் சாதம் படைத்து பரிகாரங்கள் செய்தனர்.</p><p>கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த நிலையில் 20 ரூபாய், 100 ரூபாய் சிறப்புக் கட்டண வரிசையில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.</p>