<p>திண்டுக்கல்: தொடர் விடுமுறை காரணமாக, கொடைக்கானலில் இன்று 2-வது நாளாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் கழுகுப்பார்வை காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p>திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கூடும் இடமாக விளங்குகிறது. இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக, தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.</p><p>அந்த வகையில், இன்று (ஆக.16) காலை முதலே கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால், கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்கள், பேருந்து நிலையம், ஏரி சாலை, மூஞ்சிகள் கல்லறை மேடு, சீனிவாசபுரம், உகார்தே நகர், வெள்ளி நீர்வீழ்ச்சி என கிட்டத்தட்ட 5 கிலோ மீட்டர் துரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.</p><p>அதில், ஒரு சில சுற்றுலா பயணிகள் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றதால், மற்ற வாகனங்கள் செல்ல இடமில்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து நெரிசலை முறையாக பராமரிக்க, விடுமுறை நாட்களில் கூடுதல் போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.</p>