வேலூர்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, வள்ளிமலை முருகன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்து வந்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வள்ளிமலையில் உள்ள ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆடி கிருத்திகை வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு மலைக்கோயிலின் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

குறிப்பாக, மூலவர்களான வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு தங்கக்கவசம் சாத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. மேலும், மலை அடிவாரத்தில் தனிச் சன்னதியில் வீற்றிருக்கும் வள்ளியம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், தங்கக்கவசம், மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கீழ் கோயிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசாமிக்கு வெள்ளிக்கவசம், சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டதும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஆடி கிருத்திகையை முன்னிட்டு, சரவண பொய்கையில் நீராடிய பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை சுமந்து “அரோகரா..” கோஷத்துடன் முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்காக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர்.

பக்தர்கள் அதிகளவில் குவிந்ததால், 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.