<p>தஞ்சாவூர்: ஸ்ரீ யாதவ கண்ணன் கோயிலில் நடைபெற்ற உறியடி நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.</p><p>இந்துக்களின் முக்கிய பண்டிகையாக கிருஷ்ண ஜெயந்தி விழா திகழ்கிறது. இதனை கொண்டாடும் வகையில் தஞ்சாவூர் மேலவீதி தேரடி பகுதியில், பகவான் ஸ்ரீ யாதவ கண்ணன் கோயிலில், கோகுலாஷ்டமியை முன்னிட்டு உறியடி திருவிழா கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து பூச்சொரிதல் மற்றும் கோ பூஜையும் கோயிலில் சிறப்பாக நடைபெற்றது. </p><p>விழாவின் முக்கிய நாளான கிருஷ்ண ஜெயந்தியான நேற்று இரவு (ஆகஸ்ட் 16) மேலவீதி பகுதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட யாதவ கண்ணனுக்கு பிடித்த சீடை, முறுக்கு, அவல், வெண்ணெய், சுண்டல் ஆகியவை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது.</p><p>இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் பக்தி பாடல்களை பாடினார். மேலும், விஷ்ணம்பேட்டை குழுவினரின் பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ண பகவானின் வீதி உலா ராஜ வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. </p>