<p>தேனி: சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு கேரள மாநிலத்தில் உள்ள வாகமன் சுற்றுலா தலத்துக்கு ஏராளமானோர் வருகை புரிகின்றனர். அந்த வகையில், சென்னையை சேர்ந்த 7 பேர், காரில் நேற்று முன்தினம் கேரளாவுக்கு சுற்றுலா நிமித்தமாக வந்துள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு ஏழு பேரும் வாகமனை சுற்றிப் பார்த்துவிட்டு ஓய்வெடுப்பதற்காக குமுளி நோக்கி காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது கார் ஏலப்பாறை அருகே உள்ள செம்மண் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன்பக்கத்தில் இருந்து புகை கிளம்பியுள்ளது.</p><p>இதை கண்டு சுதாரித்த கார் ஒட்டுநர், உடனடியாக காரை நிறுத்தினார். தொடர்ந்து காரில் இருந்த ஏழு பேரும் வாகனத்தை விட்டு இறங்கினர். பின், கார் படபடவென எரிய தொடங்கியுள்ளது. சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பீர்மேடு தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினர். இருப்பினும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் கார் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. இந்த சம்பவம் குறித்து பீர்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>