தேனி: விடுமுறை தினத்தை முன்னிட்டு கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இயற்கை எழில் கொஞ்சும் மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்த கும்பக்கரை அருவியில் குளிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்த நிலையில் விடுமுறை தினத்தை முன்னிட்டு கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக மழைப்பொழிவு இல்லாத நிலையில் அருவிக்கு நீர் வரத்து முற்றிலும் குறைந்து காணப்பட்டது. இதனால் கும்பக்கரை அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகெவி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் அருவிக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த மூன்று நாட்களாக தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் குறையாத நிலையில், இதன் தாக்கத்தை தணிப்பதற்காக கும்பகரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள், அங்கு ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

இதனால் கடந்த சில மாதங்களாக நீர்வரத்து இன்றி வறண்டு காணப்பட்ட கும்பக்கரை அருவி பகுதி, தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகையால் களைகட்டி காணப்படுகிறது.