<p>நீலகிரி: குடியிருப்புப் பகுதிக்குள் உணவு தேடி வந்த இரண்டு காட்டு யானைகள் கொஞ்சி குலாவிய சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரல் ஆகி வருகிறது.</p><p>கூடலூர் புத்தூர்வயல் பகுதியில் வீட்டின் முன்பு உணவு தேடி ஒன்றன் பின் ஒன்றாக வந்த காட்டு யானைகள் இரண்டும் சந்தித்தன. அப்போது தும்பிக்கைகளால் இரண்டு காட்டு யானைகளும் ஒன்றோடு ஒன்று பிணைந்து கொஞ்சிய காட்சி சிசிடிவியில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வனப் பகுதியில் இருந்து முதலில் குடியிருப்பு பகுதிக்குள் தனியாக வந்த காட்டு யானையைத் தொடர்ந்து சில நொடிகளுக்குப் பிறகு, மற்றொரு காட்டு யானையான கொம்பன் என்ற யானையும் வந்தது.</p><p>யானைகள் ஒன்றையொன்று கண்டவுடன், தங்கள் தும்பிக்கைகளை வைத்து பாசத்தை வெளிப்படுத்தின. அந்த அற்புத வீடியோ காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. தற்போது அந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரல் ஆகி வருகிறது. இதனைப் பார்த்தவர்கள் “மனிதர்கள் அன்பை பகிர்ந்து கொள்வதை விட, விலங்குகளின் பாசம் எவ்வளவு தூய்மையானது என்பதை இதுவே உணர்த்துகின்றன” என்று கருத்து தெரிவித்துள்ளனர். </p><p>இந்த காட்சியைப் பற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “யானைகள் சமூக வாழ்வை மிகவும் மதிக்கும் உயிரினங்கள். அவை தங்கள் குடும்பத்தினருடன், கூட்டத்தினருடன் பாசம், அன்பு, ஒற்றுமையை வெளிப்படுத்தும். இரண்டு யானைகளின் இத்தகைய நட்பு, பாசப்பிணைப்பு இயற்கையின் நம்பிக்கைகளில் ஒன்று” என்று கூறினர்.</p>