<p>சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் உள்ள பாரபத்தியில் நேற்று (ஆக.21) நடைபெற்றது. அந்த மாநாட்டில் பேசிய விஜய், “நான் அரசியலுக்கு வருவதற்கு முன், 'அவரே வரவில்லை.. இவர் எங்கே வரப்போகிறார்' என பலர் ஜோசியம் சொன்னார்கள். 'நான் ஒன்றும் மார்க்கெட் போன பிறகு, ஓய்வு பெற்ற பிறகு, அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை'. ஒவ்வொரு வீட்டிலும், மனதிலும் இடம்பிடித்த பிறகுதான் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளேன்” என்றார். </p><p>இதற்கு பலர் ‘அவரே வரவில்லை' என விஜய் குறிப்பிட்டது நடிகர் ரஜினியை என்றும், மார்க்கெட் போன பிறகு அரசியலுக்கு வந்ததாக கமல்ஹாசனை சொன்னார் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து விமான நிலையம் வந்த நடிகரும், எம்.பியுமான கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். </p><p>அதற்கு பதிலளித்த அவர், “இதில் நான் என்ன கருத்து சொல்ல வேண்டும். தவெக தலைவர் எனது பெயரைக் குறிப்பிட்டு சொன்னாரா? அல்லது வேறு யாருடைய பெயரையாவது சொன்னாரா?. எனவே இதுபோன்ற முகவரி இல்லாத கடிதத்திற்கு நான் பதில் போட முடியாது. இது தவறு, விஜய் எனக்கு தம்பி” என்றார்.</p>