<p>திருநெல்வேலி: நெல்லை தச்சநல்லூரில் இன்று பாஜக பூத் கமிட்டி மண்டல மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்புரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாஜக மூத்த தலைவர்கள் திருநெல்வேலிக்கு வருகை தந்துள்ளனர். </p><p>அந்த வகையில் நடிகரும், அண்மையில் பாஜகவில் இணைந்தவருமான சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வருகை தந்தார். அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் விஜய் மாநாடு குறித்து கேட்டதற்கு, “விஜய் பாஜகவை பாசிசம் என குறிப்பிடுகிறார். அவருக்கு முதலில் பாசிசம் என்றால் என்ன? என்பதே தெரியாது. வருகிற ஆகஸ்ட் 24 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நான் இது குறித்து விலாவாரியாக பேசுகிறேன்” என்றார்.</p><p>தொடர்ந்து அவரிடம் விஜய் பிரதமர் குறித்து பேசியது பற்றி கேட்டதற்கு, “நடிகர்கள் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். ஆனால், எதிலும் மரியாதை வேண்டும். பிரதமரை ’மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர்’ என அழைக்கும் அளவுக்கு விஜய் அரசியலில் வளரவில்லை. விஜய் அரசியல் கற்றுக் கொண்டு எங்கு, எதை, யாரை பற்றி பேசுகிறோம் என அறிந்து கவனத்துடன் பேச வேண்டும்” என்றார்.</p>