<p>ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அந்த சாலை வழியாக காய்கறிகள் மற்றும் கரும்புகளை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரிகள் அவ்வப்போது வருவது வழக்கம். அவ்வாறு வரும் வாகனங்கள் சாலையோரத்தில் காய்கறிகளை வீசி செல்கின்றனர். அதனை தின்பதற்காக காட்டு யானைகள் அப்பகுதிக்கு வந்தபடி உள்ளன. </p><p>இந்நிலையில், இன்று காலை தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்புகளை ஏற்றிக் கொண்டு கும்டாபுரம் சாலை வழியாக சென்று கொண்டிருந்த லாரியை ஒற்றை காட்டு யானை வழிமறித்து, தனது தும்பிக்கையால் சோதனை செய்தது. பின்னர், அந்த லாரியில் இருந்து கரும்புத் துண்டுகளை தும்பிக்கையால் எடுக்க யானை முயற்சி செய்தது. அப்போது யானையிடமிருந்து தப்பித்து செல்ல, லாரியை ஓட்டுநர் மெதுவாக இயக்கினார். அப்போது, யானை லாரியில் உள்ள கரும்பு துண்டுகளை லாவகமாக கீழே எடுத்து போட்டது. இதேபோல், தொடர்ந்து இரண்டு லாரிகளையும் நிறுத்தி அவற்றில் இருந்த கரும்பு துண்டுகளை சாலை எடுத்துக் போட்டுக்கொண்டு இறுதியாக அனைத்து கரும்புகளையும் தும்பிகையில் எடுத்துக்கொண்டு சுவைத்தபடி காட்டுக்குள் சென்றது. இந்த சம்பவத்தை பார்த்த வாகன ஓட்டி ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.</p>