தஞ்சாவூர்: ஸ்ரீசித்திபுத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, மெலட்டூரில் எழுந்தருளியிருக்கும் விவாக வரம் அருளும் ஸ்ரீ சித்தி புத்தி தட்சணாமூர்த்தி விநாயகர் கோயிலில் பிரமோற்சவ விழா விக்னேஸ்வர பூஜை, கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சுவாமி பல்வேறு வாகனத்தில் வெள்ளி பல்லக்கு மற்றும் ஓலை சப்பரத்தில் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சுவாமி தட்சணாமூர்த்தி, சித்தி, புத்தியுடன் ஆகம விதிப்படி திருக்கல்யாணம் வைபவம் நேற்று நடைபெற்றது.

இந்த வைபவத்தை முன்னிட்டு பக்தர்கள் சீர்வரிசை தட்டு, தாம்பூலம் எடுத்து கோயிலுக்கு வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து, அக்னிஹோமம் மற்றும் சுவாமி அம்பாள் சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.

திருக்கல்யாணம் வைபவத்தில் திருமணமாகாத மற்றும் திருமணம் தள்ளிபோகும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு மஞ்சள் கயிர், மலர்மாலை அணிந்து திருமண பிரார்த்தனை செய்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் திருக்கயிலாய பரம்பரை திருவாடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சார்ய சுவாமிகள் பங்கேற்றார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண வைபவம் மற்றும் பிரமோற்சவ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகிகள், கிராமவாசிகள் செய்திருந்தனர்.