<p>வேலூர்: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ஆர்.எஸ்.பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் விதமாக கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அதில், 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி, அமர்ந்த விதம் முழுவதும் விநாயகர் உருவத்தைப் பிரதிபலித்தது. அதனைக் கண்ட பெற்றோர்களும், ஆசிரியர்களும் பாராட்டு தெரிவித்தனர். </p><p>அதனைத் தொடர்ந்து, மாணவர்கள் அனைவரும் பல விதமான விநாயகர் முகமூடிகளை அணிந்து, பள்ளியில் நடந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். </p><p>விழாவின் நிறைவாக மாணவர்களுக்கு சுண்டல், கொழுக்கட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. தனியார் பள்ளி மாணவர்கள் பிரம்மாண்ட விநாயகர் உருவமாக அமர்ந்து காட்சியளித்த நிகழ்வு அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும், இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.</p><p>நிகழ்ச்சியை நேரில் கண்ட பொதுமக்கள் கூறுகையில், சிறிய குழந்தைகள் இப்படிச் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் விழாவைக் கொண்டாடுவது பாராட்டத்தக்கது. களிமண் விநாயகரை வழிபாடு செய்வதால் ஆறுகள் மற்றும் குளங்கள் மாசுபடாமல் இருக்கும். குழந்தைகளுக்கு கலாசாரமும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் ஒரு சேர பள்ளியில் கற்றுக் கொடுப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது, என தெரிவித்தனர்.</p>