<p>தஞ்சாவூர்: கும்பகோணம் பகவத் விநாயகருக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யபட்டு வீதி உலா சிறப்பாக நடைபெற்றது. </p><p>நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவினை முன்னிட்டு, கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயிலில் கடந்த 18 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற பிறகு உற்சவர் விநாயகர் விதவிதமான அலங்காரத்தில் அருள் பாலித்தார். </p><p>இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவின் 10 ஆம் நாளான இன்று, உற்சவர் விநாயகர் தங்க கவசம் அணிந்து, நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, உச்சி பிள்ளையார் கோயிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வீதியுலாவாக காவிரியாற்றுக்கு வந்தடைந்தார். பின்பு அங்கிருந்து பழைய பாலக்கரை படித்துறையில் பகவத் விநாயகருக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியப்பொடி, மஞ்சள்பொடி, மாப்பொடி, பஞ்சாமிர்த்தம், தேன், பால், தயிர், எலும்பிச்சை, சந்தனம் முதலிய பொருட்களை கொண்டு அபிஷேக ஆராதனைகள் செய்த பிறகு தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது.</p><p>இந்நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர், நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.</p>
