<p>தஞ்சாவூர்: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ஒரு வாரமாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கும்பகோணம் மாநகரில் பல்வேறு இடங்களில் கம்பீர விநாயகர், விவசாயி விநாயகர், சிந்தூர் வெற்றி விநாயகர், சங்கு விநாயகர், லிங்க விநாயகர், ரிஷப விநாயகர், சிம்ம விநாயகர் என மொத்தம் 44 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். </p><p>இந்நிலையில் நேற்று மாலை கும்பகோணம் மாநகரில் மகாமக குளம் அருகேயுள்ள வீரசைவ பெரிய மடத்தில் இருந்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மாலை 5 மணி அளவில் நாதஸ்வர மேள தாளங்கள் முழங்க தொடங்கியது. தலைமை அஞ்சலக சாலை, ராமசாமி கோயில் சன்னதி, பெரிய கடைவீதி, பூக்கடைத்தெரு, டிஎஸ்ஆர் பெரிய தெரு, காந்தி பூங்கா சந்திப்பு வழியாக பழைய பாலக்கரையில் உள்ள காவிரியாற்று படித்துறையில் ஊர்வலம் நிறைவு பெற்றது.</p><p>இதைத்தொடர்ந்து இரவு 10 மணி அளவில் முதல் விநாயகர் சிலை விஜர்சனம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு விநாயகர் சிலைகளாக வரிசையாக நள்ளிரவு வரை தொடர்ந்து விஜர்சனம் செய்யப்பட்டது. </p>