<p>காஞ்சிபுரம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்ட அனைத்து விநாயகர் சிலைகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக பூஜை செய்து வந்த விநாயகர் சிலைகளை பக்தர்கள் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளில் கரைத்து வருகின்றனர்.</p><p>அந்த வகையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட நிலையில், அவை இன்று மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட்டன. முன்னதாக, விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஏற்றி பேண்ட் வாத்தியங்கள், சிவ வாத்தியங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.</p><p>இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.எஸ். சந்தோஷ் மோகன், நிர்வாகிகள் ஏழுமலை, இஷ்டலிங்கம், சுதாகர், லட்சுமணன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர். கற்பக விநாயகர், தாமரை விநாயகர், நந்தி விநாயகர், சிங்கமுக விநாயகர் உள்ளிட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.</p>