<p>சென்னை: நாடு முழுவதும் கடந்த புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு வட சென்னை பகுதியில் புத்தக விநாயகர், தாழம்பூ தட்டு விநாயகர், மளிகைப் பொருள் விநாயகர், வெள்ளி விநாயகர் என சுமார் 644 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. </p><p>இதில் மளிகை பொருட்கள் விநாயகர் மட்டும் கடந்த வெள்ளி கிழமையன்று எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. அதேபோல், புத்தக விநாயகர், தட்டு விநாயகர் சிலைகள் பிரித்து பொதுமக்கள் வழங்கப்பட உள்ள நிலையில், பிற விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக வட சென்னையில் 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சிலைகளை கரைப்பதற்கான பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. </p><p>இதில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 250 சிலைகளும், திருவொற்றியூர் ராமகிருஷ்ணா நகர் பகுதியில் சென்னையை சேர்ந்த 45 சிலைகளும், மாதவரம், புழல் பகுதியை சேர்ந்த 15 சிலைகளும் என தனித்தனியாக பிரிக்கப்பட்டு சிலைகளானது கரைக்கப்பட்டு வருகின்றது.</p><p>சிலை கரைக்கப்படும் இடங்களில் பொதுமக்கள் வந்து செல்வதற்கு இடையூறு இல்லாத வகையிலும் தடுப்புகள் போடப்பட்டு, 2 ராட்சச கிரேன்கள் உதவியுடன் டிராலி மூலமாகவும் சிலைகளை கரைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வட சென்னை மற்றும் சென்னையை சேர்ந்த காவல் துறை இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் இந்த சிலை கரைக்கும் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.</p>