சென்னை: ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் டோமினிக். இவர் இன்று (செப்.3) அதிகாலை அமெரிக்காவிலிருந்து தமிழ்நாடு வந்த அவரது உறவினர்களை அழைத்துவர சென்னை விமான நிலையம் சென்றுள்ளார். அப்போது 2 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 5 பேரை காரில் ஏற்றிக்கொண்டு வேளச்சேரி நோக்கி வந்துள்ளார்.

ஆலந்தூர் அருகே ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, காரின் முன் பகுதியிலிருந்து திடீரென புகை வந்துள்ளது. அதனை பார்த்த டோமினிக், காரை சாலையோரமாக நிறுத்த முயன்றபோது, கார் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், காரில் இருந்த உறவினர்களை பத்திரமாக கீழே இறக்கியுள்ளார். பயணிகள் கீழே இறங்கிய சில வினாடிகளிலேயே கார் முழுவதும் பரவிய தீ மளமளவென பற்றி எரிந்துள்ளது.

அதனைக்கண்ட அப்பகுதியினர் உடனடியாக கிண்டி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பே, கார் முற்றிலுமாக எரிந்து நாசமாகியது. இதனால், அப்பகுதியில் புகை மூட்டம் சூழ்ந்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த ஆலந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றியபோது, கார் ஓட்டிய நபர் துரிதமாக செயல்பட்டு காரில் இருந்த நபர்களை கீழே இறக்கியதால், 6 மாத குழந்தை உட்பட 6 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.