<p>தென்காசி: தென்காசியை சேர்ந்த வள்ளியம்மாள் பாட்டி தனது 110-வது பிறந்தநாளை தலைமுறை வாரிசுகளுடன் இணைந்து கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.</p><p>தென்காசி மாவட்டம், மேலப்பாட்டாக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பூலித்தேவர் என்பவரது மனைவி வள்ளியம்மாள். 1915 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு, நேற்று 110வது பிறந்தநாள் ஆகும். 5 தலைமுறைகளை பார்த்து விட்ட பாட்டி வள்ளியம்மாளின் 110-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட அவரது மகன்களும், பேரன்களும், கொள்ளுப் பேரன்களும் முடிவு செய்தனர். அதன்படி, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஒன்றிணைந்து வள்ளியம்மாள் பாட்டயின் பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடினர்.</p><p>பாட்டியின் மகன், மகள், பேரன், பேத்தி, பூட்டன், பூட்டி , ஓட்டன், ஓட்டி என ஐந்து தலைமுறை வாரிசுகள் ஒன்றிணைந்து, மேள தாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து, ஆட்டம் பாட்டத்துடன் வள்ளியம்மாள் பாட்டிக்கு கேக் வெட்டி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர். தொடர்ந்து, அனைவரும் பாட்டிக்கு இனிப்புகள் வழங்கி ஆசிர்வாதம் பெற்றனர்.</p><p>இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், “முதியவர்கள் தனக்கு கிடைத்த பொக்கிஷம். அவர்களை நாம் பாதுகாப்பதன் மூலம், அவர்களிடம் இருந்து இளைய தலைமுறைகள் பல்வேறு பாரம்பரியத்தை கற்றுக்கொள்ள முடியும். அனைவரும் தங்களது வீட்டில் உள்ள முதியவர்களை குறை கூறாமல் பாதுகாக்க வேண்டும். அவர்களை முதியோர் காப்பகத்திற்கு அனுப்புவதன் மூலம் தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷத்தை சிலர் இழக்கிறார்கள்” என தெரிவித்தனர்.</p>