<p>அரியலூர்: அருள்மொழி கிராமத்தில் அரசுப் பேருந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிந்து விபத்துக்குள்ளானது. இதில், அதிஷ்டவசமாக பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர்.</p><p>தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து இன்று (செப்.9) காலை 5 மணியளவில் அரசு பேருந்து ஒன்று காரைக்குறிச்சி, அருள்மொழி பகுதி வழியாக அரியலூர் சென்றது. இதில், பேருந்தை பாலகிருஷ்ணன் என்ற தற்காலிக ஓட்டுநர் ஓட்டிய நிலையில், நடத்துநராக சிவக்குமார் என்பவர் இருந்துள்ளார். அப்போது, பேருந்தில் 5 பயணிகள் மட்டுமே இருந்துள்ளனர்.</p><p>இதில் பேருந்து, அரியலூர் மாவட்டம் அருள்மொழி கிராம பகுதியில் சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வயல்வெளி பள்ளத்தில் இறங்கியது. இதில், அருகாமையில் இருந்த மின்கம்பத்தின் மீது பேருந்து மோதாமல் இருந்தததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.</p><p>இதனையடுத்து, அவர்கள் மாற்று பேருந்து மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து, பள்ளத்தின் சேற்றில் சிக்கிய பேருந்தை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>