வேலூர்: ஆரணி சாலையில் பேருந்துக்கும், லாரிக்கும் இடையே பைக்குடன் சிக்கிய கல்லூரி மாணவர், நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

வேலூர் மாவட்டம் தொரப்பாடி பகுதியை சேர்ந்தவர் விஜய் (18). இவர் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், இன்று (செப்.9) காலை ஆரணி சாலையில் உள்ள தினகரன் பேருந்து நிறுத்தம் அருகே விஜய் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது, முன்னாள் சென்ற அரசு பேருந்தை முந்த முயன்ற விஜயின் பைக், திடீரென எதிரே வந்த லாரியில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. அதைக் கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து சென்று விஜயை மீட்டுள்ளனர். அப்போது, பேருந்துக்கும், லாரிக்கும் நடுவே இடுக்கில் சிக்கிய விஜய் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இருந்தாலும், அவரது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார், விஜயை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், விஜய் பேருந்தை முந்தும் போது எதிரே வந்த லாரியில் பைக் மோதுவதும், பின்னர் வாகனங்களின் இடுக்கில் இளைஞர் சிக்கிக் கொள்வதும் தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.