திருவாரூர்: பால் பாக்கெட்டுகளை ஏற்றிச் சென்ற வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மூளமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (40). இவர் நன்னிலம் பகுதியில் இயங்கி வரும் விக்ரம் என்பவருக்கு சொந்தமான தனியார் பால் ஏஜென்சியிலிருந்து பால் பாக்கெட்களை கடைகளுக்கு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், இன்று காலையில் வழக்கம் போல் ரமேஷ் குமார் வேனில் பால் பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு, கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள கடைகளில் டெலிவரி செய்துள்ளார். பின்னர், நன்னிலம் செல்வதற்காக திருவாரூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது, வேனில் பின்பக்கத்தில் புகை கிளம்பியுள்ளது.

அதனை இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் ரமேஷ்குமாரிடம் தெரிவித்துள்ளார். அப்போது, வேனியில் தீ பற்றியதை கண்டதும் ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு கீழே இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால், வேன் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைத்தது. மேலும், சம்பவ இடத்திலிருந்த பனை மரத்திலும் தீ பற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் தீயணைப்புத்துறையினர், வேனில் பற்றி எரிந்த தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், தீ வாகனம் முழுவதும் பரவியதில் வேன் மட்டுமின்றி, அதிலிருந்த பால் பாக்கெட்டுகளும் தீக்கிரையானது. இந்த தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த திருவாரூர் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.