<p>மதுரை: மதுரையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. இதில், தாழ்வான பகுதிகள் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.</p><p>மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி, நேற்று (செப் 10) காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், பிற்பகல் 3 மணிக்கு மேல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. </p><p>குறிப்பாக, அண்ணா பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம்,கோரிப்பாளையம், சிம்மக்கல், அண்ணாநகர், முனிச்சாலை, அனுப்பானடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதில், அப்பகுதியில் இருந்த மேம்பாலத்தில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.</p><p>அதேபோல், ஆரப்பாளையம் பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். இதனையடுத்து, மாநகராட்சி பணியாளர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும், ஒத்தக்கடை யானைமலையில் கனமழை காரணமாக திடீரென உருவாகிய அருவி பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.</p>
