திண்டுக்கல்: அரசுப் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள பூவன் கிழவன்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (24) மற்றும் வையம்பட்டியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (22). உறவினர்களான இருவரும் வடமதுரையில் உள்ள தனியார் நூற்பாலையில் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் செப்.10 ஆம் தேதி இரவு பூவன் கிழவன்பட்டியில் தங்கியிருந்த இவர்கள், மறுநாள் காலை பணிக்காக இரு சக்கர வாகனத்தில் வடமதுரை நோக்கி சென்றுள்ளனர். கோபால்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது, திண்டுக்கல்லில் இருந்து நத்தம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து அவர்களது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் மீட்ட பொதுமக்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர்.

தற்போது, இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த கோபால்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.