தேனி: பெரியகுளம் அருகே பார்க்கிங் பகுதியில் (car Parking) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகளை இரண்டு நபர்கள் இரும்பு கம்பியால் அடித்து நொறுக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் நிஷாத் அகமது என்பவருக்கு சொந்தமான இடத்தில் வாகனங்கள் நிறுத்தும் பார்க்கிங் பகுதி இயங்கி வருகிறது. இங்கு, சுமார் 50-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், 30-க்கும் அதிகமான கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த நிஷாத் அகமது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் இரண்டு நபர்கள் இரும்பு கம்பியால் கார் கண்ணாடிகளை அடித்து உடைத்தது தெரியவந்தது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து நிஷாத் அகமது தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து முத்துகிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, கார் கண்ணாடிகளை உடைத்த கோச்சடைபாண்டி தப்பி ஓடிய நிலையில் அவரை தேடி வருகின்றனர். தற்போது இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

முதற்கட்ட விசாரணையில், தென்கரை முத்துராஜா பகுதியில் அரசு நிலத்திற்கு பட்டா கேட்டு அப்பகுதி மக்கள் விண்ணப்பித்ததற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிலர் மனு அளித்தனர். இதனால், ஆத்திரத்தில் இருவர் கார் பார்க்கிங் பகுதியில் இருந்த கார் காண்ணாடிகளை அடித்து நொறுக்கியது தெரியவந்தது. இருப்பினும், கோச்சடைபாண்டி பிடித்தால்தான் முழு விவரம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.