நீலகிரி: குன்னூர் பழங்குடியினர் பகுதியில் தண்ணீர் தொட்டியில் தவறுதலாக விழுந்த யானையை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள பழங்குடியினர் குடியிருப்பு பகுதிக்கு இன்று (செப்.12) அதிகாலை 3 மணியளவில் பெண் யானை ஒன்று தண்ணீர் குடிக்க வந்துள்ளது. அப்போது தவறுதலாக தண்ணீர் தொட்டியில் விழுந்த யானை, வெளியே வரமுடியாமல் பிளிறியுள்ளது.

யானையின் சத்தத்தைக் கேட்டு அச்சமடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில் விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பலமணி நேரமாக போராடியுள்ளனர். ஆனால் எந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை எனத் தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து வந்த குன்னூர் வனத்துறை வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனக்குழுவினர், முதலில் யானையை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர், தண்ணீர் தொட்டியின் ஓரத்தை உடைத்த வனத்துறையினர், யானை வெளியேறும் வழியை ஏற்படுத்தினர். அந்த வகையில், சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தண்ணீர் தொட்டியில் விழுந்த பெண் யானை வெளியேறியது.

அப்போது, யானையை பத்திரமாக மீட்ட வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத், “ஒற்றை காட்டு யானை குடிநீர் தொட்டியில் விழுந்ததாக மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுபோன்று வனவிலங்குகள் உயிருக்கு போராடும் நிலையில், பொதுமக்கள் உடனடியாக வனத்துறையை தொடர்பு கொள்ள வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.