சென்னை: ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 7 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் துணிக்கடை, உணவகம், மதுபான பார், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இங்குள்ள இரண்டாம் தளத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்ற வந்தன. இந்த சமயத்தில் நேற்று (செப் 13) மாலை 5 மணியளவில் இங்கு தீ விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து, எச்சரிக்கை அலாரம் எழுப்பப்பட்டு வணிக வளாகத்திற்குள் இருந்த பொதுமக்கள் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து, இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் தீ மளமளவென பரவி கரும்புகை எழும்பியது.

அதன் பின்னர் கிண்டி, துரைப்பாக்கம், திருவான்மியூர், வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. சுமார் 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு நள்ளிரவு 12 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் குறித்து கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர்கள் கூறினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.